ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் – சந்துரு; பக்.168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை – 14; ✆044-42009603.

காடுகளில் வாழ்ந்தால்தான் அவை காட்டுயிர்கள் என்றில்லை. பழக்கப்படுத்தப்படாத எல்லா உயிரும் காட்டுயிர்தான் என்கிறார் நூலாசிரியர்.

அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகக் காணும் பட்டாம்பூச்சிகள், வெüவால்கள், பறவைகள் உள்பட உயிர்களுடன் சத்தியமங்கலம், பில்லூரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கலவையாகவும் சுவாரஸ்யமாகவும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

நாரை அலகு, மீன்கொத்திகள் நீரைக் கிழித்து கொண்டும், பெரிய அதிர்வை ஏற்படுத்தாமலும் இரையைப் பிடிக்கும். இந்த லாகவத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்து ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியதுதான் 'புல்லட் ரயில்' என்கிற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக காட்டுயிர்களும் விளங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கருந்தேள், கூகை, பாம்பு, யானை உள்ளிட்ட உயிர்களின் மீது பரிவு காட்டுவதிலாகட்டும், பறவைகள் கணக்கெடுப்பு, பறவை நோக்கல், காட்டுயிர்களை நேரில் காண்பதற்காக நூலாசிரியர் அலைந்த அலைச்சலாகட்டும் அவருடைய ஒவ்வோர் அனுபவமும் பரவசமூட்டுகிறது.

மனிதர்களுக்குத்தான் எல்லை, மாநிலப் பங்கீடுகள்; யானைகளுக்கு அல்ல. தண்ணீரும், மேய்ச்சலும் உள்ள இடங்களை நோக்கி குறிப்பிட்ட தடங்கள் வழியாக யானைகள் கூட்டமாக நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும்.

அதன் தடத்தில் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விளைநிலங்கள் இருந்தால் ஒருகை பார்த்துவிட்டுத்தான் போகும் என்றும் அதேநேரத்தில் பழங்குடியினருக்கும் யானைகளுக்குமான உறவு அலாதியானது என்றும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

ஒவ்வொரு கட்டுரைக்கும் மெருகூட்டும் விதமாக புகைப்படங்களை இணைத்திருப்பது சிறப்பு. வன உயிரின ஆர்வலர்கள், பறவைக் கணக்கெடுப்பாளர்கள், வனங்களுக்குள் சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்