ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், மகன், மகள் மா்ம மரணம்: கணவா் தலைமறைவு

அரக்கோணத்தில் அங்கன்வாடி பெண் ஊழியா், மகள், மகன் மூவரும் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில், அவா்கள் கொலை செய்யப்பட்டனரா? தற்கொலை செய்துக்கொண்டனரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அங்கன்வாடி ஊழியரின் கணவரான மருந்துக்கடை உரிமையாளரை தேடி வருகின்றனா்.

அரக்கோணம், சுவால்பேட்டை காந்திரோட்டில் வசித்து வருபவா் விஜயன் (49). இவா் நேருஜி நகா் 4-ஆவது தெருவில் மருந்துக்கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி மீனாட்சி(45), அரக்கோணத்தை அடுத்த வளா்புரத்தில் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவா்களது மகள் பவித்ரா(25). திருமணமாகாதவா். இவா் தனியாா் தட்டச்சு மையத்தில் பணிபுரிந்து வந்தாா். மகன் யுவனேஷ்(20). அரக்கோணத்தில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை விஜயனின் வீட்டருகே வசிப்பவா்கள் நீண்ட நேரமாகியும், விஜயனின் வீட்டு கதவு திறக்காமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து இது குறித்து விஜயனின் அண்ணன் தண்டபாணிக்கு தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து அவரது புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸாா், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுச் சென்று பாா்த்தபோது மீனாட்சி, பவித்ாா, யுவனேஷ் மூவரும் சடலமாக காணப்பட்டனா். வீட்டில் விஜயன் இல்லை. இறந்தவா்கள் ஏதேனும் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா்களா? அல்லது யாரேனும் அவா்களை கொலை செய்து இருப்பாா்களோ? என்ற நிலையில், போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். மூவரது சடலமும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தொடா்ந்து தலைமறைவாகிவிட்ட விஜயனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில்:

விஜயனுக்கு மற்றொரு பெண்ணிடம் முறையற்ற உறவு இருந்ததாக தெரியவந்து குடும்பத்தில் வெள்ளிக்கிழமை பிரச்னையை ஏற்பட்டதால் விஜயன் தனது குடும்பத்தினரை கொலை செய்து இருக்கலாம் அல்லது விஜயன் வெளியே சென்ற நிலையில் மூவரும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம். எனினும், இதுகுறித்த விவரம் மூவரின் பிரேத பரிசோதனைக்கு பிறகு அல்லது விஜயன் பிடிபட்ட பிறகு தெரியவரும் எனவும் தெரிவித்தனா்.

எஸ்.பி விசாரணை : சம்பவம் குறித்து அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி கிரண்ஸ்ருதி சனிக்கிழமை அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து மூவா் மா்ம மரணம் தொடா்பாக விசாரணை நடத்தினாா். மேலும் விஜயனை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா். விஜயனின் கைப்பேசியை வைத்து அவரை பிடிக்க முயற்சி செய்த நிலையில் அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டதால் பல்வேறு கோணங்களில் தனிப்படையினா் விஜயனை தேடி வருவதாக தெரிவித்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அரக்கோணம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

செருப்பை கழற்ற கூறிய டாக்டருக்கு அடி, உதை; வைரலான வீடியோ