ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்திய கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கும் – பினராயி

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமானது இந்திய கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (செப். 18) எச்சரித்தார்.

கூட்டாட்சியை பலவீனமாக்கி மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ‘

இதன்மூலம், மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்படும். இதில் மக்களவை – சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

கூட்டாட்சிக்கு எதிரானது ஒரே நாடு, ஒரே தேர்தல்

இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமானது கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தி, மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டுவரப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமானது இந்த ஆட்சிக்காலம் முடிவதற்குள் அமல்படுத்தப்படும் என அமித் ஷா கூறிய அடுத்த தினமே இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேர்தல் அரசியலை நீர்த்துப்போகச் செய்வதற்கான மறைமுக முயற்சியை சங்பரிவார் அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தனித்துவமான சுற்றுச்சூழலையும் பின்புலத்தையும் கொண்டது.

இந்த மாற்றங்களை புறக்கணித்துவிட்டு இயந்திரகதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தினால் அது கட்டாய மத்திய ஆட்சிக்கே வழிவகுக்கும். இறுதியில் ஜனநாயகத்தையே அழித்துவிடும். சங்பரிவாரின் இத்தகைய முயற்சிக்கு எதிராக ஜனநாயக அமைப்பை ஆதரிப்பவர்கள் இணைய வேண்டும் என பினராயி குறிப்பிட்டார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!