காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என்றும், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து இல்லாமல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கு பேசிய பிரதமர் மோடி, “இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வருவதற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். இன்று இந்தியா பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர்ந்துகொண்டு வருகிறது.
இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும், இந்தியாவின் வளங்களின் உகந்த விளைவைக் கொடுக்கும், வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதில் நாடு புதிய வேகத்தைப் பெறும், ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நாங்கள் இப்போது செயல்பட்டு வருகிறோம். இன்று, இந்தியா ஒரு நாடு ஒரே சிவில் கோட் என்ற மதச்சார்பற்ற சிவில் கோட் நோக்கி நகர்கிறது.
முன்பு நாடு முழுக்க வேறு வேறு வரி செலுத்தும் முறைகள் இருந்தன. ஆனால், பாஜக தலைமையிலான பாஜக அரசுஒரே நாடு ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது” என்று பேசினார்.
இதையும் படிக்க | இந்திய – சீன எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாற்றம்!
இதை தொடர்ந்து, இன்று பத்திரிகையாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி அவர் சொல்வதை செய்ய மாட்டார். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.அந்த வகையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த செப். 18 அன்று மத்திய அமைச்சரவை மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.