ஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

‘கண்காட்சி அரங்கம்’ 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பழனி,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது. பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் காலை 8.25 மணிக்கு இந்த மாநாடு தொடங்கியது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மாநாட்டு கொடியை ஏற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்தார். இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வேல் கோட்டம், அறுபடை வீடுகளின் மூலவரான முருகப்பெருமான் போன்ற உருவங்கள், புகைப்பட கண்காட்சி, முருகனின் 3டி புகைப்பட கண்காட்சி, முருகப்பெருமானின் பெருமை குறித்த விர்சுவல் ரியாலிட்டி காட்சியில் அமைக்கப்பட்ட பாடலை அதற்கான பிரத்யேக கருவியை அணிந்து அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து கருத்தரங்கம், சொற்பொழிவாளர் சுகிசிவத்தின் சிந்தனை மேடை, தேனிசை, இசை நிகழ்ச்சி, அறுபடை வீடு பரதநாட்டியம், பக்தி இன்னிசை கிராமிய இசை, நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. மாநாட்டையொட்டி அரங்கம் பகுதியில் மலைபோன்ற பிரமாண்ட 'செட்' போடப்பட்டு அதில் சிவன்-பார்வதி, முருகன், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு மத்தியில் வள்ளி-தெய்வானையுடன் ஆறுமுகமாக காட்சி அளிக்கும் முருகனின் திருவுருவம் அமைக்கப்பட்டு இருந்தது.

கண்காட்சி அரங்கில் முருகனின் புகைப்பட கண்காட்சி, அறுபடை வீடு மூலவர் உருவம், விர்சுவல் ரியாலிட்டி காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முருகனின் பாடல்கள், 3டியில் முருகனின் புகைப்பட கண்காட்சி என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை மாநாட்டில் குவிந்திருந்த பக்தர்கள் பார்த்து ரசித்தனர். மேலும் கண்காட்சி அரங்கில் நின்று தங்கள் செல்போனில் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

2-ம் நாள் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவேல் இறைவன் தீத்தமிழ் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதன் பிறகு முருகனும் பரதமும், திருப்புகழ் தேனிசை, யாமிருக்க பயமேன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாலையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதையடுத்து இரவு விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கண்காட்சி அரங்கம்' 30ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என்றும் அனைவருக்கும் அனுமதி இலவசம், என்பதால் இன்று (ஆக.25) ஒரே நாளில் வருகை தந்து கூட்ட நெரிசலில் சிக்காமல் பொறுமையாக வருகை தரவும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தி உள்ளார்.

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Citroen Launches Aircross Xplorer Limited Edition in India at Rs 8.49 Lakh