ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் விராட் கோலியை மதிப்பிட தேவையில்லை: கௌதம் கம்பீர்

ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் விராட் கோலியை மதிப்பிடத் தேவையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கடைசியாக விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், அவரது பேட்டிங் மீதான கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க:மீண்டும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்!

கௌதம் கம்பீர் நம்பிக்கை

ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் விராட் கோலியை மதிப்பிடத் தேவையில்லை எனவும், ரன்கள் குவிப்பதற்காக அவர் ஆர்வமாக இருக்கிறார் எனவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி குறித்த எனது எண்ணங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. அவர் உலக தரத்திலான வீரர். பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்து வருகிறார். இந்திய அணிக்காக அறிமுகமானது முதல் இன்று வரை அணிக்காக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற அவரது வேட்கை இன்னும் குறையவில்லை. ரன்கள் குவிக்க வேண்டும் எனும் அவரது வேட்கை எப்போதும் குறையாது.

சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் அவரை உலக தரத்திலான வீரராக வலம் வரச் செய்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும் என அவர் நினைப்பார்.

இதையும் படிக்க:மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம்

ஒரு போட்டியில் அல்லது ஒரு தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக வீரர் ஒருவரை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் வீரர்களை மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் வீரர் ஒருவரை மதிப்பிட்டால், அது நியாயமாக இருக்காது. விளையாட்டில் தோல்விகளும் இருக்கும். அனைவருக்கும் அனைத்து நாள்களும் சிறப்பான நாள்களாக அமையாது. வீரர்களுக்கு ஆதரவாக செயல்படுவது எனது பணி. சிறப்பாக விளையாடும் 11 பேரை தேர்வு செய்வதுதான் எனது வேலையே தவிர, அணியிலிருந்து எவரையும் நீக்குவது அல்ல. இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து வீரர்களுக்கும் இருக்கும் என்றார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 16) பெங்களூருவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது