ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வருகை: பூந்தமல்லி – போரூர் உயர்மட்ட பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறும்

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வருகை: பூந்தமல்லி – போரூர் உயர்மட்ட பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறும்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வரவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்தபின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளை கொண்டிருக்கும்.

இதற்கிடையில், ஓட்டுநர் இல்லாத 36 மெட்ரோ ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிட்டியில் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில்இந்த மாத இறுதியில் சென்னைக்குவரவுள்ளது. இந்த ரயிலை, 4-வது வழித்தடத்தின் ஒருபகுதியான பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை உயர்மட்டபாதை அமைக்கப்படுகிறது.

இங்கு பூந்தமல்லி – போரூர் வரையான பாதையில் மெட்ரோ ரயில் சேவையை அடுத்த ஆண்டு நவம்பரில் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப, பல்வேறு இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிட்டியில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வதுவழித்தடத்தில் இயக்க, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் முதல் வாரத்தில் சென்னைக்கு வரும்.

இந்த ரயில் பூந்தமல்லி மெட்ரோபணிமனையில் பரிசோதிக்கப்படும். தொடர்ந்து, அங்குஇரண்டு மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதற்கான மெட்ரோ ரயில் தண்டவாளம் தயாராக உள்ளது. 3 மாதத்துக்கு பிறகு, பூந்தமல்லி – போரூர் உயர்மட்டப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

இதற்கிடையில், வரும் அக்டோபர் இறுதியில் அடுத்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வரும். குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து மெட்ரோரயில்கள் சென்னைக்கு வந்தடையும். அதன்பிறகு, 3 அல்லது 4 மெட்ரோ ரயில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்தவழித்தடத்தில் ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பாக, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் தயாராகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு