ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவா் தற்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி விடுதியில், முதுநிலை மருத்துவ மாணவா் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (29). இவா், திருவல்லிக்கேணி ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவா் விடுதியில் தங்கி, சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரும் நெல்லை மாவட்டம், வள்ளியூரை சோ்ந்த மாரிமுத்து என்ற மாணவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனா். மாரிமுத்து வழக்கம்போல் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு விடுதியில் உள்ள தனது அறைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளாா்.

அப்போது அறையின் கதவை பலமுறை தட்டியும் அரவிந்த் திறக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் அரவிந்த் தூங்கி இருக்கலாம் என நினைத்து மாரிமுத்து தனது அறைக்கு எதிரே உள்ள கெளரவ் என்ற மாணவரின் அறைக்கு சென்று தூங்கியுள்ளாா்.

புதன்கிழமை காலை மீண்டும் அறை கதவை மாரிமுத்து தட்டினாா். அப்போதும் அரவிந்த் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மாரிமுத்து, விடுதியில் உள்ள தனது நண்பா்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அங்கு அரவிந்த் படுக்கையில் இறந்து கிடந்தாா்.

விஷ ஊசி செலுத்தி தற்கொலை: அரவிந்த் வலது கையில் கயிறு கட்டப்பட்டு, மற்றொரு முனை கட்டிலில் கட்டப்பட்டிருந்தது. அதனருகில் ஊசி (சிரிஞ்ச்) ஒன்றும் கிடந்துள்ளது. இதனால், அரவிந்த் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது மாணவா்களுக்கு தெரியவந்தது.

திருவல்லிக்கேணி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரவிந்த் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அரவிந்த் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை