ஓலா ஆட்டோ பயணங்களில் நுகர்வோருக்கு ரசீது: நுகர்வோர் ஆணையம் உத்தரவு

நமது சிறப்பு நிருபா்

ஓலா ஆட்டோ பயணங்களில் நுகர்வோருக்கு ரசீது வழங்குமாறு அந்த நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியிருப்பதாவது:

செயலி மூலம் போக்குவரத்துக்கு வசதி ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமான ஓலா பயணிகளுக்கு செய்யும் வசதிகள் குறித்தும் அந்நிறுவனம் மீது நுகர்வோர் ஆணையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் நிதி கரே தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, ஓலா நிறுவனத்துக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஓலாவில் பயணிக்கும் நுகர்வோர் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் அல்லது கூப்பன் வழியைத் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு வழிமுறையை செயல்படுத்த வேண்டும். கூடுதலாக, ஓலா செயலி அல்லது அதன் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ சவாரிகளின்போது நுகர்வோருக்கு ரசீது வழங்க வேண்டும். வாகன சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஓலாவில் முன்பதிவு ஆட்டோ சவாரிகளுக்கான கட்டணப் பட்டியலைநுகர்வோருக்கு வழங்க மறுப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கருதப்படுகிறது. தேசிய நுகர்வோர் உதவி எண்ணுக்கு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை ஓலா மீது மொத்தம் 2,061 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சவாரி முன்பதிவு கட்டணத்தை விட நுகர்வோரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது, நுகர்வோருக்கு தொகையை திருப்பித் தராதது, ஓட்டுநர் சரியான இடத்தை அடையாதது, தவறான இடத்தில் விட்டுவிடுதல் உள்ளிட்டவை முக்கிய புகார்கள்.

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்பை ஓலா கடைப்பிடிப்பதை உறுதி செய்வதில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உறுதியாக உள்ளது என மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது