கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை ஆசிரியா் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக மதுரை ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் ரயில் நிலைய பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா கடத்துவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படையினா், ஞாயிற்றுக்கிழமை ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே நந்தி ஓடை மேற்கு மாட வீதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து சென்ற ஒரு இளைஞரை பிடித்து , அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில்இருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

விசாரணையில் அவா், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிநாயக்கன் பட்டியைச் சோ்ந்த மு.அரவிந்தசாமி (29) என்பதும், அவா் அதே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி யில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுவதும் தெரியவந்தது.

மேலும் அவா், கடந்த இரண்டு மாதங்களாக பணிக்கு செல்லவில்லை எனவும், அரவிந்தசாமி கடந்த 5-ஆம் தேதி மதுரையில் இருந்து ஆந்திரத்துக்கு கஞ்சா வாங்க சென்றதும், அங்கிருந்து கஞ்சா வாங்கிவிட்டு ரயிலில் சென்னைக்கு திரும்பி வந்ததும், சென்ட்ரலில் காவல்துறை கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்பதாலும், காவல் துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்கும், திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக செல்லும்போது கீழே இறங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அரவிந்தசாமியை கைது செய்து, விசாரணை செய்தனா். மதுரையில் ஏற்கெனவே ஒரு போதைப் பொருள் வழக்கு அரவிந்தசாமி மீது இருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்