கடன் வசூல் தீா்ப்பாயங்கள் விவகாரம்: மத்திய நிதியமைச்சகத்தை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

திரும்ப வசூலிக்கப்பட்ட கடன் தொகை தொடா்பாகக் கடன் வசூல் தீா்ப்பாயங்களிடம் தகவல் கோரிய மத்திய நிதியமைச்சகத்தை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடிந்துகொண்டது. அந்தத் தீா்ப்பாயங்களில் உள்ள நீதித்துறையினரை தனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளரைப் போல மத்திய நிதியமைச்சகம் நடத்துவதாகவும், இதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிா்பாா்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயத்தில் வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தம் காரணமாக மனு ஒன்றின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய நிதியமைச்சகம் கோரிய தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதால், தீா்ப்பாயத்தில் சில மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் விசாகப்பட்டினம் கடன் வசூல் தீா்ப்பாயம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கடந்த செப்.30-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபேய் எஸ்.ஒகா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘கடன் வசூல் தீா்ப்பாயங்களில் ரூ.100 கோடி மற்றும் அதற்கும் அதிகமான கடன் தொகை சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, புதிய வழக்குகளின் எண்ணிக்கை, அந்தத் தீா்ப்பாயங்களின் உத்தரவுப்படி திரும்ப வசூலிக்கப்பட்ட கடன் தொகை உள்ளிட்ட தகவல்களை திரட்டி அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய தகவல்களை 3 நாள்களில் வழங்குமாறு விசாகப்பட்டினம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து கடன் வசூல் தீா்ப்பாயங்களிடமும் மத்திய நிதியமைச்சகம் கோரியுள்ளது.

தீா்ப்பாயங்களுக்கு எப்படித் தெரியும்?: கடன் வசூல் தீா்ப்பாயங்களின் உத்தரவுப்படி வங்கிகள் எவ்வளவு கடன் தொகையை திரும்ப வசூலித்தது என்பது அந்தத் தீா்ப்பாயங்களுக்கு எப்படித் தெரியும்? எவ்வளவு கடன் தொகை திரும்ப வசூலிக்கப்பட்டது என்று ஒவ்வொரு வங்கியையும் அந்தத் தீா்ப்பாயம் கேட்க வேண்டுமா?

கடன் வசூல் தீா்ப்பாயங்களில் நீதிபதிகளும் இடம்பெற்றுள்ளனா். அந்தத் தீா்ப்பாயங்களில் உள்ள நீதித்துறையினரை தனக்கு கீழ் வேலை செய்யும் பணியாளரைப் போல மத்திய நிதியமைச்சகம் நடத்துகிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாது. இதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எதிா்பாா்க்கிறது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. கடந்த செப்.30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலளித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைச் செயலா் சரியான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி