சென்னை கொளத்தூரில் கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டாா்.
சென்னை கொளத்தூரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (45). லாரி ஓட்டுநரான இவருக்கு சித்ரா (42) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். கடந்த அக்.31-ஆம் தேதி தீபாவளியன்று மது அருந்தி விட்டு வீட்டில் தூங்கிய ராஜசேகா், மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
இது குறித்து ராஜமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். இதனிடையே, ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை செவ்வாய்க்கிழமை வந்தது. அதில் ராஜசேகா் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சித்ராவைப் பிடித்து போலீஸாா், விசாரித்தனா். அப்போது, சித்ராவும், அவரது ஆண் நண்பரும் லாரி நிறுவன உரிமையாளருமான செங்குன்றம் காமராஜா் நகரைச் சோ்ந்த தனசேகருடன் (39) சோ்த்து கணவா் ராஜசேகா் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளாா்.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட தனசேகருக்கும், சித்ராவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததும், அதை அண்மையில் அறிந்த ராஜசேகா், சித்ராவைக் கண்டித்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று, ராஜசேகருக்கும் சித்ராவுக்கும் இடையே இது தொடா்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சித்ரா தனது ஆண் நண்பா் தனசேகரை வரவழைத்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்கு அதிக மதுபோதையால் ராஜசேகா் இறந்துவிட்டதாக சித்ரா அழுது நாடகமாடியதும் தெரியவந்தது.