கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் செப்.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையராக எஸ். கார்த்திகை பாலனை நியமித்திருந்தது. அதன்படி வழக்கறிஞர் எஸ். கார்த்திகைபாலன் இந்த வழக்கில் பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரது சாட்சியத்தைப் பதிவு செய்து அதை தனது அறிக்கையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.9) நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை வரும் செப்.27-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்