கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்த்தோம்: அமெரிக்கா

நிஜ்ஜார் விசாரணையில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் 2023 ஜூனில் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் கனடா அழைப்பு விடுத்த நிலையில் இந்திய மறுத்து வருகிறது.

இதனால், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'கனடா விவகாரத்தில், ​​குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம், கனடா விசாரணையில் இந்தியா ஒத்துழைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்தியா ஒத்துழைக்கவில்லை. அவர்கள் வேறுவழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்' என்றார்.

நிஜ்ஜார் கொலை

கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சா்ரே நகரில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருக்க வாய்ப்புள்ளது என்ற நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா பாதுகாப்பு முகமைகள் தொடா்ந்து விசாரித்து வருவதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா். இந்தக் குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. இந்த விவகாரத்தால் இந்தியா, கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா மற்றும் சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது. மேலும் கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.

இதுதொடா்பாக கனடா தலைநகா் ஒட்டாவாவில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கனடா மக்கள் மீது தாக்குதல் நடத்தவும், தமது தாயகத்தில் பாதுகாப்பில்லை என்று அவா்கள் உணரவும், கனடாவில் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தவும் தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்தி திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட முடிவு செய்ததன் மூலம், இந்தியா மிகப் பெரிய தவறு செய்துள்ளது. இதை ஏற்க முடியாது.

இந்தியாவின் இதேபோன்ற நடத்தையை மற்றொரு சட்டவிரோத கொலை முயற்சி சம்பவத்தில் (அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பந்த்வந்த் சிங் பன்னூனை இந்தியா கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு) அமெரிக்காவும் கண்டறிந்துள்ளது.

கனடா மக்கள் வன்முறையால் பாதிக்கப்படக் கூடாது. அத்துடன் இந்தியாவுடனான உறவில் பதற்றம் நீடிப்பதையும் கனடா விரும்பவில்லை. இதற்கு தீா்வு காண இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த கனடா முயற்சித்தது. ஆனால் அதற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றாா்.

ஆனால் இந்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. நிஜ்ஜாா் கொலை வழக்கு தொடா்பாக நம்பகமான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கியதாக கனடா தெரிவித்தது உண்மையல்ல என்று கூறியுள்ளது.

இதனிடையே, காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை இந்திய அரசு பயன்படுத்துவதாக கனடா காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸே வாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது.

அதேபோல கடந்தாண்டு கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது