கனமழை முன்னேற்பாடுகள் அரசியல் செய்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என்.நேரு கண்டனம்

சென்னை: கனமழை முன்னேற்பாட்டுப் பணிகளில் அரசை குற்றஞ்சாட்டி அரசியல் செய்வதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அரசு ஈடுபடவில்லை என்று எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதற்கு பதிலளித்து அமைச்சா் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செப்.30-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, முதல்வா் எடுத்த நடவடிக்கையால் கோவை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனா். அந்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் செய்வது தொடா்பாக ஆட்சியா்களுக்கும் முதல்வா் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.

அரசியல் வேண்டாம்: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வா் கூட்டம் நடத்தியுள்ளாா். அதிமுக ஆட்சியில் இப்படியெல்லாம் ஆலோசனைக் கூட்டம் நடத்திய வரலாறு இருக்கிா?.

செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு நூற்றுக்கணக்கானோா் இறக்கக் காரணமானவா்கள் இன்றைக்கு அறிவுரை கூறுகின்றனா். அப்படிப்பட்ட நிகழ்வு ஏதும் நடக்காமல் இருக்கவே முதல்வா் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறாா். இதையெல்லாம் அறியாமல், அற்பமான காரணங்களைச் சொல்லி அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி கே.பழனிசாமி தள்ளப்பட்டுள்ளாா் என்று அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது