கனிம நிதி முறைகேடு: சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் பெண் அதிகாரி கைது

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவட்ட கனிமவள நிதி முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரி ராணு சாஹுவை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்திருக்கிறது.

இந்த வழக்கில், இரண்டு நாள்களுக்கு முன்பு, இதே வழக்கில் தொடர்புடையதாகக் கூறி பெண் அதிகாரி மாயா வாரியர் என்பவரை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், வியாழக்கிழமை ராணு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் அக். 22ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அமலாக்கத்துறை அளித்த தகவலின்படி, இவ்விரு அதிகாரிகளும், கனிமவள நிதி முறை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநில காவல்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில், ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில், மாவட்ட கனிமவள நிதியை, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்துவது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுரங்க ஒப்பந்ததாரர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளையே மாவட்ட கனிமவள நிதியாகும். இந்த நிதி, சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 2021 முதல் 2022ஆம் ஆண்டு வரை ராணு சாஹு, கோர்பா மாவட்ட ஆட்சியராக இருந்தார், மாயா வாரியார், இதே மாவட்டத்தின் பழங்குடியின மேம்பாட்டுத் துறை உதவி ஆணையராக பதவி வகித்தவர்.

கோர்பா மாவட்டத்தில் இவர்கள் இருவரும் பதவி வகித்தக் காலத்தில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வணிகர்களிடம் சட்டவிரோதமாக கமிஷன் தொகை பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு செயல்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கோர்பா மாவட்டத்துக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அந்த ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் இதில் சில நூறு கோடிகள் கமிஷனாக மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

Nayanthara SLAMS Cosmetic Surgery Rumours: ‘Burn Me, There’s No Plastic In Here’

Yashwantrao Chavan Centre To Represent India At The World Cities Day 2024 Global Conference In Shanghai

Tamil Nadu NEET UG 2024: Registration For Stray Round Counselling To End Today