‘கன்வார் யாத்திரை தொடர்பான உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது’ – பிரியங்கா காந்தி

லக்னோ,

வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவ பக்தர்கள் 'கன்வார்' யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை மேற்கொள்பவர்கள் 'கன்வாரியாக்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இந்த யாத்திரையின்போது ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பின்னர் அந்த புனித நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

இதனிடையே உத்தர பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கன்வார் யாத்திரை வரும் 22-ந்தேதி தொடங்க உள்ளதால் உத்தர பிரதேசம் முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், கன்வார் யாத்திரை தொடர்பான உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் எந்த ஒரு குடிமகன் மீதும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்பு சட்டம் உறுதியளிக்கிறது.

ஆனால் உத்தர பிரதேசத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் முன்பு அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும் உத்தரவு நமது அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும்.

சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதும் இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெறுவதோடு, உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி