கம்பனின் தமிழமுதம் – 1: கம்பன் தந்த சொற்கள்!

கம்பனின் தமிழமுதம் – 1: கம்பன் தந்த சொற்கள்!கம்பராமாயணத்தின் சொற்பதிவுகள்: ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

கம்பனின் படைப்பான இராமாயணம், ஆறு காண்டங்களைக் கொண்டது. இவற்றில் மொத்தம் 118 படலங்கள் உள்ளன.

சென்னை கம்பன் கழகம், கம்பராமாயணப் பாடல்களை ஒரே நூலாக 1976-ஆம் ஆண்டு பதிப்பித்தது. இந்தப் பதிப்பின்படி, கம்பனில் மொத்தம் 10,368 பாடல்கள் உள்ளன. இவை தவிர, மிகைப்பாடல்கள் என்னும் பிரிவின் கீழ், 1,293 பாடல்கள உள்ளன.

தமிழ்ப் பேரகராதி ஒன்றினை உருவாக்க, சென்னை பல்கலைக்கழகம், 1926-ஆம் ஆண்டு, ஒரு குழுவினை அமைத்தது. அதன் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தவர் ஐயா வையாபுரிப் பிள்ளை அவர்கள்.

ஏழு தொகுதிகள் கொண்ட ஒரு பேரகராதியினை இக்குழு வெளியிட்டது. தமிழின் பல இலக்கியங்கள் குறித்தும் ஆய்வு செய்த இக்குழு, கம்பனின் இராமாயணப் படைப்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டது. கம்பனில் மூன்று முதல் மூன்றரை லட்சம் தனிச் சொற்கள் உள்ளதாக இக்குழு அறிவித்தது.

கழகத் தமிழகராதியை உருவாக்கிய அறிஞர் குழு, மற்றொரு ஆய்வு செய்தது. ஒரு சொல், பலமுறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்துமே "ஒரு சொல்' என்னும் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டன. உதாரணமாக, "வந்து' என்னும் ஒற்றைச் சொல், காப்பியத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும், அது "ஒருசொல்' என்றே கணக்கிடப்பட்டது. இப்படியே அனைத்துச் சொற்களையும் கணக்கிட்டதில், கம்பன் ஏறத்தாழ 1,24,000 தனிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளான் என்று அந்த அறிஞர் குழு அறிவித்தது.

ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதிய பெருமைமிகு பெரியவாச்சான் பிள்ளை அவர்கள், அந்தப் பாசுரங்களைக் கொண்டே முழு இராமாயணக்கதையும் தொகுத்தார். இந்தப் பாசுரப்படி ராமாயணம், ஏறத்தாழ 800 சொற்கைளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சற்றேறக் குறைய 800 சொற்களில் சொல்ல வாய்ப்புள்ள கதையை, 1,24,000 தனிச்சொற்களில் சொல்லியிருப்பது, தமிழுக்குக் கம்பன் செய்துள்ள மாபெரும் தொண்டு. கம்பனைக் கற்பதால், இத்தனைத் தமிழ்ச் சொற்களுடன் நம்மால் உறவாட முடிகிறது!

வடமொழிக் காப்பியத்தையே கம்பன் தமிழில் தந்தான் என்பது நாம் அறிந்தது. அதில் இருந்த, காப்பிய மாந்தர்களின் வடமொழிப் பெயர்களை, தூய தமிழில் மாற்றம் செய்தும் தந்தான் கம்பன். ஒருசிலவற்றை இங்கு காணலாம்.

தசரதன் – தயரதன்

லக்ஷ்மணன் – இலக்குவன்

விபீஷணன் – வீடணன்

ஆதிசேஷன் – ஆதிசேடன்

இந்திரஜித் – இந்திரசித்தன்

ஹனுமான்/ஆஞ்சனேயன் – அனுமன்

அக்ஷகுமார் – அக்ககுமாரன்

ராஜ ரிஷி – கோமுனி

ஹிரண்யகசிபு – இரணியன்

ஹிரண்யாக்ஷன் – பொற்கணான்

(ரண்யம் – பொன்னிறம்)

கவாக்ஷன் – ஆனிறக்கண்ணன்

ரத்தாக்ஷன் – குருதிக்கண்ணன்

தூம்ராக்ஷன் – புகைநிறக்கண்ணன்

மகராக்ஷன் – மகரக்கண்ணன்

ஜாம்பவான் – சாம்பவன்/சாம்பன்

சூர்யசத்ரு – சூரியபகைஞன்

அசகாயசூரன் – கூட்டு ஒருவரை

வேண்டா கொற்றவன்

சிம்ஹாசனம் – அரியணை.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி