கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் – சோனியா காந்தி

புதுடெல்லி,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழகம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் சோனியா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கலைஞர் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தோழர்களுடன் அவருக்கு மரியாதை செலுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் கருணாநிதியை பலமுறை சந்தித்தது, அவரின் உரையை கேட்டது, அவரின் ஞானத்தின் வழியே கிடைத்த அறிவுரைகள் ஆகியவற்றை பாக்கியமாக கருதுகிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும். தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும். தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்மொழி, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர். தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாசாரத்தை பாதுகாக்க போராடிய கலைஞருக்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்