கரோனா பேரிடரில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உதயநிதிக்கு கோரிக்கை

கரோனா பேரிடரில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உதயநிதிக்கு கோரிக்கை

சென்னை: விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு அரசு வேலை தரப்படும் என அறிவித்துள்ளதுணை முதல்வர் உதயநிதி, அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை நான்கை வழங்கிட வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தி அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் முனைப்போடு செயல்பட்டு வந்ததை காண முடிந்தது. இந்த நிலையில் துணை முதல்வர் என்ற வகையில் இன்னும் பல மடங்கு வீரியத்துடன் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உயர்த்திட தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் உதயநிதி முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் முதலில் உயிர்காக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் இருந்து துணை முதல்வரின் செயல்பாடுகள் துவங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அரசு மருத்துவர்களின் கோரிக்கை என்பது நீண்டகால பிரச்சினையாக உள்ளது. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தங்களை அரசு கண்டுகொள்ளவில்லையே, தங்களின் மீது அரசின் பார்வை விழவில்லையே என்ற வருத்தமும், வேதனையும் ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே உள்ளது.

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உதவுமாறு, உதயநிதியை அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு ஒரு முறையும், எம்எல்ஏ ஆன பிறகு ஒரு முறையும் சந்தித்து வேண்டினோம். அப்போது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

மேலும் பின்னர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அரசு மருத்துவர் உரிமைக்காக போராடி மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி அனுராதா, தன் குடும்பத்தோடு என்னை சந்தித்த போது, தங்களுக்கான கோரிக்கைகளை விடுத்து, மருத்துவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி பேசிய அவர்களின் உறுதி, கொள்கைப் பிடிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்திருந்தார். ஆனால் இன்னமும் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை.

உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் என சமீபத்தில் உதயநிதி பெருமையாக தெரிவித்து இருந்தார். அதேநேரத்தில் மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியத்தை தந்து அவமானப்படுத்துவது தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை நாடு முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தவில்லை என்பது ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது.

அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அக்டோபர் 28-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. எனவே இந்த நேரத்தில் துணை முதல்வர் தலையிட்டு கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். கடந்த ஐனவரி மாதம் திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் நடந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனாகிய எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதே வேளையில் நான் கடவுளாகப் பார்ப்பது மருத்துவர்களை தான் என்று தெரிவித்தது தான் நினைவுக்கு வருகிறது. மருத்துவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள முதல்வர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கிடைத்திட நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

அதைப்போல துணை முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடம் சென்று வணங்கினார். அதைப்போல சூட்டோடு சூட்டாக, இங்கு நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள கருணாநிதி அரசாணைக்கு (GO.354) உயிர் கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறோம். கருணாநிதியின் பேரன் என்பதை பெருமையாக நினைக்கும் உதயநிதி, தன் தாத்தாவின் அரசாணைக்கு தடை போடுவதை விரும்ப மாட்டார் என உறுதியாக நம்புகிறோம். மேலும் மக்கள் உயிரைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்களை தொடர்ந்து தங்கள் ஊதியத்திற்காக போராடுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என கருதுகிறோம்.

அதைப்போல 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என துணை முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி அரசு வேலை கேட்டு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பிறகும், சென்னை உய ர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் இன்னமும் அரசு கருணை காட்டவில்லை என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

எனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றது அரசு மருத்துவர்களின் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது என சொல்லப்படும் வகையில், அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை நான்கை வழங்கிட வேண்டும். மேலும் கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை துணை முதல்வரின் கைகளால் வழங்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி

ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

லாவோஸ் நாட்டில் ராமாயண நாடகத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி