கல்லூரி தேர்தலில் சீக்கிய மாணவரின் தலைப்பாகையை அவிழ்த்து அட்டூழியம்!

தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் ஸ்ரீ குரு தேக் பகதூர் கால்ஸா கல்லூரியில் முதல்வர் அறையின் வெளியே இரு குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(செப்.22) நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது சீக்கிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் மாணவர்கள் மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இம்மாதம் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஸ்ரீ குரு தேக் பகதூர் கால்ஸா கல்லூரி பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் மாணவர் தேர்தலை தன்னிச்சையாக நடத்திக்கொள்ளுமெனவும் தில்லி பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இக்கல்லூரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் அறிவுறுத்தலின்பேரில் கல்லூரி நிர்வாகம் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் முடிவால் மாணவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஆர்எஸ்எஸ்ஸை சார்ந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷாத்(ஏபிவிபி) மற்றும் காங்கிரஸை சார்ந்த இந்திய தேசிய மாணவர்கள் சங்கம்(என்எஸ்யுஐ) ஆட்சேபனை தெரிவித்துள்ளன. இந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள், தனியாக தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீக்கிய மதத்தைச் சேர்ந்ததொரு மாணவர் கல்லூரி நிர்வாகம் நடத்தும் மாணவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சில மாணவர்கள், முதல்வர் அறையிலிருந்த அந்த மாணவரை அடித்து தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. அதில் அந்த மாணவர் அணிந்திருந்த தலைப்பாகை(டர்பன்) அவிழ்ந்து விழுந்துள்ளது.

இந்த காட்சிகளை சில மாணவர்கள் தங்கள் கைப்பேசி கேமராக்களில் படம்பிடித்துள்ளனர். அவை தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதையடுத்து கல்லூரியில் சீக்கிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதனிடையே, பாதிக்கப்பட்டுள்ள சீக்கிய மாணவர் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரிடமிருந்து பெறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி