கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் விழிப்புணர்வு பேரணி

சென்னை: கல்வி, ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், பருவநிலை மாற்றத்துக்கான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் ‘இந்தியா மார்ச் ஃபார் சயின்ஸ்' எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அறிவியலின் முக்கியத்துவத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கத்துடன் ‘அறிவியலுக்கான இந்தியப் பேரணி’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கான முதலீட்டை அதிகரிக்கவும், அறிவியல் கருத்துகளை பரப்புவும் வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை, பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற பேரணியில் சென்னை ஐஐடி,‌ கணித‌ ஆராய்சி நிறுவனம், அண்ணா‌ பல்கலை. மாணவர்கள், பல்வேறு பள்ளிகளின் ‌மாணவர்கள் என ‌நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.‌

கூட்டத்தில் கல்விக்கு மத்தியபட்ஜெட்டில் 10 சதவீதமும், மாநில பட்ஜெட்டில் 30 சதவீதமும், அறிவியல் ஆராய்ச்சிக்கு ஜிடிபியில் 3 சதவீதமும் ஒதுக்க வேண்டும். சுற்றுச்சுழலைப் பாதுகாத்து பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மேலும், ஆராய்ச்சிமாணவர்களுக்கான உதவித்தொகையும் உயர்த்தப்பட வேண்டும்.

உலகளவில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெப்ப அலையில் இருந்து பொது மக்களை பாதுகாக்க செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தவிர்க்க கார்பன் வாயு வெளியேற்றல் உட்பட தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். அதனுடன் வேளாண்மையை பாதுகாத்து, விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு