கல்வியில் சமய பாடங்களை புகுத்தும் முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானத்தை செயல்படுத்த கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

கல்வியில் சமய பாடங்களை புகுத்தும் முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானத்தை செயல்படுத்த கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச் சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஏற்கெனவே பல மடங்கு கட்டண உயர்வால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு மேலும் தாக்குதல் தொடுக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு அமைந்துள்ளது. எனவே, சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில், முருகன் கோயில்களில் மாணவ – மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத் துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

எந்த ஒரு மதக் கோட்பாட்டையும் பரப்புவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணிபாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழகம் கல்வித்துறையில் மதச் சார்பின்மை மிக்க மாநிலமாக திகழ்கிறது. இந்நிலையில், தற்போதுமுருகன் மாநாட்டு தீர்மானங்கள் மாணவர்களை மதரீதியாக பிளவுபடுத்துவது, மதச் சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையை அழிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் நோக்கத்தை முறியடிக்கும் எண்ணத்தில், அறிவியலுக்கும், மதச் சார்பின்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது ஏற்புடையதல்ல. எனவே முருகன் மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related posts

சமூகவலைதளம் மூலம் பழக்கம்: 16 வயது மாணவியை சீரழித்த 4 பேர் கைது

சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!