“கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடக்கக்கூடாது” – மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்

சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். முன்விரோதம் காரணமாக 2 வாரங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் டவுன் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட முத்துக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

மேலும் அவர் வாதாடுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறினார். மேலும் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

அவற்றை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளை போலீசார் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? இதுபோன்ற சம்பவத்தால்தான் கள்ளக்குறிச்சியில் பல அப்பாவிகள் இறந்து உள்ளனர். இது தொடர வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. இந்த வழக்கை பொறுத்தவரை சட்டவிரோத மது விற்பனையை பொதுமக்களே சென்று வீடியோ, புகைப்படம் எடுத்த பின்பும் திண்டுக்கல் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கு துணைபோன போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில், இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? எனவும் கேள்வி எழுப்பினார்.

உடனே அரசு வக்கீல், "சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்" என உறுதி அளித்தார்.

அதை தொடர்ந்து, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்