கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: இதுவரை 14 பேர் கைது

விஷ சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தமோதரன், இவரது மனைவி சந்திரா ஆகியோரை இரு தினங்களுக்கு முன் கைதுசெய்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தொடர் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரை பண்ருட்டி அருகே கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா, லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கடலூர் மாவட்டம் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதின் தொடர்ச்சியாக மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் கைதாாகி சிறை சென்று வெளிவந்த மாதேஷூக்கு, மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி பில் அளித்து உதவியதாக பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்திவந்த சக்திவேல் என்பவரையும், மீன் வியபாரி கண்ணன் என்பரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதேபோன்று சேலம் மாவட்டம் கருமந்துறை கல்லாநத்தம் சங்கர் என்பரையும் கைது செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் இருவர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விற்பனைக்கு விருத்தாசலத்தில் இருந்து மூலப்பொருள் பெறப்பட்டதாக இரண்டு பேரை கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலை பிரிவில் அகல்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவரும் ஜோதிமணி மற்றும் கேசவகுமார் ஆகிய இருவரும் கள்ளச்சாராயத்தில் கலக்க பயன்படுத்தும் வேதிப்பொருளை மாதேஷூக்கும் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் விருத்தாசலத்தில் இருந்த ஜோதிமணி மற்றும் கேசவகுமாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜோதிமணி மற்றும் கேசவகுமார் ஆகிய இருவரும் வேதிப்பொருளை மாதேஷிடமிருந்து ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் விருத்தாசலம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்த கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார், வழக்குப் பதிவுசெய்து செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 14 கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை