கவரப்பேட்டை ரயில் விபத்து: என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ரயில் விபத்து நடந்த பகுதியில் காலையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் உடன் இணைந்து ஆய்வுகள் செய்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டும் வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன விபத்து?

சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மைசூரு – தார்பங்கா விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் வழக்கம் போல் உயர்நிலைக் குழு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

விபத்து நடந்த இடத்துக்கு, ரயில்வே பாதுகாப்புத் துறை ஆணையரும், அவருடன் உயர் அதிகாரிகளும் வந்து விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், மைசூரு – தார்பங்கா பாகமதி விரைவு ரயில், கவரப்பேட்டை அருகே, தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது. ரயில் பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு தடம்புரண்டது. விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்டவர்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. பயணிகளின் நலனை தமிழக அமைச்சர்கள் முன்னிட்டு கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகள், எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்த விரைவு ரயிலுக்கு மெயின் லைனில் செல்லத்தான் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக ரயில் லூப் லைனில் சென்றுள்ளது. ஏற்கனவே லூப் லைனில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததால், சிக்னலை மீறி லூப் லைனில் சென்ற விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சதி வேலை ஏதேனும் காரணமா என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!