கவரப்பேட்டை ரயில் விபத்து: பழிசுமத்தும் விளையாட்டு ஆரம்பம்!

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூரு – தார்பங்கா விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் வழக்கம் போல் உயர்நிலைக் குழு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

ரயில்வே பாதுகாப்புத் துறை ஆணையரும், சம்பவ இடத்துக்கு வந்து விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், மைசூரு – தார்பங்கா பாகமதி விரைவு ரயில், கவரப்பேட்டை அருகே, தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் எரிந்து நாசமானது. ரயில் பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு தடம்புரண்டது. விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்டவர்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. எழுத்துகளா, எழுத்துக்களா? அண்ணாதுரையா, அண்ணாத்துரையா? பிழையற்ற தமிழ் அறிவோம்! – 8

இந்த நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகள், எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதாவது, கவரப்பேட்டை ரயில் நிலையம் செல்ல, விரைவு ரயிலுக்கு மெயின் லைனுக்குத்தான் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக ரயில் லூப் லைனில் சென்றுள்ளது. ஏற்கனவே லூப் லைனில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்ததால், சிக்னலை மீறி லூப் லைனில் சென்ற விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ரயில்களும், தண்டவாளங்களும் இயங்குவது குறித்து பெரிய அளவில் புரிதல் இல்லாத மக்களின் கேள்வி என்னவாக இருக்கிறது என்றால்? மெயின் லைனுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தால், விரைவு ரயில் எப்படி லூப் லைனுக்குச் செல்ல முடியும், அந்த தண்டவாளம் எப்படி ரயில் செல்வதற்கு ஏதுவாக இருந்திருக்க முடியும்?

சாலையில் வாகனங்களை ஓட்டுவது போல, ரயிலையும் தண்டவாளத்தில், ஓட்டுநர் நினைக்கும் தண்டவாளப் பாதையில் இயக்க முடியுமா? ஓட்டுநரின் கையில்தான் முழுக்க முழுக்க ரயிலின் பாதுகாப்பு இருக்கிறதா?

இத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தபிறகும் ரயில் விபத்துகளுக்கு ஓட்டுநர்களை மட்டுமே குறைசொல்லி வழக்குகளை முடித்துவைக்கும் போக்கு இன்னமும் தொடரத்தான் போகிறதா? என கேள்வி எழுப்புகிறார்கள்.

நல்வாய்ப்பாக, ரயில் விபத்தில் யாரும் பலியாகவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்களுக்காக அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!