கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை: சிலரிடம் மறுவிசாரணை மேற்கொள்ள முடிவு
சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற்ற நேரத்தில் செல்போன் பயன்படுத்திய 200 பேரின் பட்டியலை தயாரித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது.
இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக தமிழக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரி முனி பிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 டி.எஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் 3 குழுக்களாக பிரிந்து, விசாரணை நடத்துகின்றனர். நிலைய மேலாளர், பாய்ன்ட்மென், விபத்து நடைபெற்ற நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பான விசாரணையை ரயில்வே போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொன்னேரி ரயில் நிலையம் மற்றும் கவரைப்பேட்டை நிலைய பகுதிகளில் விபத்து நடைபெற்ற நேரத்தில் செல்போன் பயன்படுத்திய சந்தேகத்துக்கிடமான 200 பேரின் பட்டியலை ரயில்வே போலீஸார் தயாரித்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதவிர, சிலரை அழைத்து மறுவிசாரணையும் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.