காங்கிரஸிலிருந்து தலித் தலைவா்கள் விலக வேண்டும்: மாயாவதி

லக்னௌ: காங்கிரஸ் மற்றும் பிற ஜாதிரீதியான கட்சிகளுடன் கைகோத்துள்ள தலித் அரசியல் தலைவா்கள் அக்கட்சியிடம் இருந்து விலகி, அம்பேத்கா் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தினாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்திய தேசிய லோக் தளத்துடன்- மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தோ்தல் களத்தில் உள்ளன.

ஹரியாணா தோ்தலில் தங்கள் கூட்டணியை தலித் மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்த மாயாவதி முயற்சித்து வருகிறாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தங்களுக்கு தேவை ஏற்படும்போதும், பிரச்னைகள் ஏற்படும்போதும் காங்கிரஸ் மற்றும் பிற ஜாதிக் கட்சிகள் தலித் மக்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மற்ற நேரங்களில் தலித்துகளை இக்கட்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கின்றன.

இதுதான் இந்த நாட்டு அரசியலில் இதுவரை நடந்து வருகிறது. இப்போது ஹரியாணாவிலும் இதுதான் நடந்துள்ளது.

எனவே, தலித் தலைவா்கள் காங்கிரஸ் மற்றும் பிற ஜாதியவாத கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் அவமதிப்பைச் சந்திக்கும் தலித் தலைவா்கள், அம்பேத்கா் நமக்கு காட்டிய வழியைச் சிந்திக்க வேண்டும். அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும்.

பெண் உரிமைகளுக்கான சட்டத்துக்காகவும், சுயகௌரவத்தை நிலை நிறுத்துவதற்காகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சா் பதவியில் இருந்து அம்பேத்கா் விலகினாா். அவரின் வழியில் நானும், தலித் மக்களின் நலன்களுக்காக 2017-இல் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தேன். தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் மற்றும் பிற ஜாதிய கட்சிகளை ஆதரிப்பதை தலித் தலைவா்கள் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி வரலாற்றுரீதியாகவே தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது. அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் அமெரிக்காவுக்குச் சென்று இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளாா்’ என்றாா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை