காசாவில் போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்கவேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி:

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற பிரதமர் மோடி, அங்கு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசை சந்தித்தார். அப்போது, இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெறும் போரால் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்திருப்பது குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் மீண்டும் உறுதி அளித்தாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை தெரிவித்தார் பிரதமர் மோடி. அத்துடன், போர் நிறுத்தம் செய்யவேண்டும், பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும், அத்துடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகள் கொள்கை மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.

ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஆதரவு மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற திறன் மேம்பாட்டு முயற்சிகளில் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து உதவி மற்றும் ஆதரவு குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேசினர்.

இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!