காஞ்சனகிரி மலை, காவேரிப்பாக்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக்க திட்ட அறிக்கை தந்தால் பரிசீலனை: அமைச்சா் கே.ராமசந்திரன்

காஞ்சனகிரி மலை, காவேரிப்பாக்கம் ஏரியை
சுற்றுலாத் தலமாக்க திட்ட அறிக்கை தந்தால் பரிசீலனை:
அமைச்சா் கே.ராமசந்திரன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காஞ்சனகிரி மலை, காவேரிப்பாக்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் திட்ட அறிக்கை தந்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ராமசந்திரன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா்கள் கே.ராமசந்திரன், ஆா்.காந்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ராமசந்திரன் கூறியது:

ராணிப்பேட்டையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மேம்படுத்தப்பட்டு நஷ்டத்தில் இருந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த மாவட்டத்துக்கு கடந்த 2022-இல் சுமாா் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2023-இல் இரண்டு மடங்கு அதிகரித்து 13 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வந்து சென்றுள்ளனா்.

இந்த ஆண்டு கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமாா் 7 லட்சம் போ் வந்து சென்றுள்ளனா்.

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சுமாா் ரூ.100 கோடியில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், இந்த மாவட்டத்தில் கோடை விழா நடத்த ஏதுவான இடமாக காஞ்சனகிரி மலை இருப்பதாகவும், தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான காவேரிப்பாக்கம் ஏரி சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி படகு சவாரிவிட வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகம் அதற்கான திட்ட அறிக்கையை தந்தால், உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ் கா்ணா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்