காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தலவிருட்ச மரத்தில் 4 சுவை மாங்காய்கள் காய்த்தன

மாமரத்தில் காய்த்து தொங்கும் மாங்காய் அருட்பிரசாதமாக தங்களுக்கு கிடைக்காதா என ஆவலோடு பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.

காஞ்சீபுரம்,

சிவபெருமானின் அவதார தலங்களாக விளங்கும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் எனும் பஞ்சபூத தலங்களில் பிருத்வி எனும் மண் தலமாக காஞ்சீபுரம் ஏலவார்குழலி சமேதஏகாம்பரநாதர் கோவில் விளங்குகிறது. பார்வதி தேவி தவம் புரிந்த மாமரம் இந்த கோவிலில் தல விருட்சமாக விளங்குகிறது. இந்த மாமரத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வண, வேதங்களை குறிக்கும் வகையில் 4 சுவைகளை தரக்கூடிய 4 வகையான மாங்காய்கள் காய்த்து வந்தன.

3,500 ஆண்டுகள் பழமையான இந்த மாமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டு போகும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பழமையான மாமரத்தின் மரபணுவை பிரித்தெடுத்து மீண்டும் அதை போன்றே மாமரத்தை உருவாக்கி பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பழமையும், தெய்வீக தன்மையும், கொண்ட இந்த மாமரம் தற்போது 4 வகையான சுவைகளுடன் கூடிய 4 வகையான வடிவங்களில் மாங்காய்களுடன் காய்க்க தொடங்கி உள்ளது.

கண்ணை கவரும் வகையில் பூத்து குலுங்கி கொத்து கொத்தாக மாங்காய் காய்க்க தொடங்கி உள்ள மாமரத்தின் கீழ் சோமாஸ்கந்தராக அமைந்துள்ள ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலி அம்மனையும் மாமரத்தையும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் தெய்வீக தன்மை உள்ள மாமரத்தில் காய்த்து தொங்கும் மாங்காய் அருட்பிரசாதமாக தங்களுக்கு கிடைக்காதா என ஆவலோடு பக்தர்கள் பார்த்து செல்கின்றனர்.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்