காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானம்

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானம்

பொன்னேரி: பழவேற்காட்டில் நேற்று நடந்த தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு), 6 -வது மாநில மாநாடு, நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காட்டில் நடைபெற்றது. மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் புல்லுவிளை, சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காலை முதல், மாலை வரை, பேரணி, கூட்டமைப்பின் கொடியேற்றம், வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் நடைபெற்ற இம்மாநாட்டில், 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 41 பேர் கொண்ட மாநில குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் கவுரவ தலைவராக ஜி.செலஸ்டின், மாநில தலைவராக எம்.கருணாமூர்த்தி, மாநில பொதுச் செயலாளராக எஸ்.அந்தோணி, பொருளாளராக எஸ்.ஜெயசங்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் துறைமுக பணியை விரைந்து முடிக்க வேண்டும், மீனவர்களை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழவேற்காடு ஏரியை தூர் வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்