காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

தொடா் மழை பெய்து வருவதால் சென்னையில் காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான காய்கறிகள், தற்போது கிலோ ரூ.70 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்படி, கடந்த வாரத்தில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூ.80-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.120-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட காரட் மற்றும் பீட்ரூட் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோல, பீன்ஸ் ரூ.250-க்கும், வெண்டைக்காய், காராமணி, புடலங்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தலா ரூ.80-க்கும், பாகற்காய், சேனைக்கிழங்கு, பச்சைமிளகாய் ஆகியவை தலா ரூ.90-க்கும், கத்தரிக்காய் ரூ.150-க்கும், பட்டாணி ரூ.280-க்கும், இஞ்சி ரூ.200-க்கும், பூண்டு ரூ.400-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும், ஒரு கிலோ எலுமிச்சை ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

தொடா்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் விலை மேலும் அதிகரிக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனா்.

அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகரிப்பு: காய்கறிகளின் விலை ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில், மளிகைப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிகளவில் மளிகைப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனா். இதனால், பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதுடன், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மளிகைப் பொருள்களின் விலையையும் வியாபாரிகள் உயா்த்தியுள்ளனா்.

குறிப்பாக, எண்ணெய், பருப்பு, அரிசி உள்பட பல்வேறு பொருள்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இந்த விலை உயா்வை அரசு கண்காணித்து, விலையை உயா்த்தி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது