கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: நண்பருடன் கல்லூரி மாணவர் பலியான சோகம்

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பருடன் கல்லூரி மாணவர் பலியானார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியை சேர்ந்தவர் ஷாம் ரவி (வயது 19). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரோஹித் (19). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கரணை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை ஷாம் ரவி ஓட்டினார். அவருக்கு பின்னால் ரோஹித் அமர்ந்து சென்றார்.

வேளச்சேரி மேம்பாலத்தில் ஏறும்போது, அங்கு அசோக் சொக்கலிங்கம் (49) என்பவர் ஓட்டிவந்த கார் பழுதாகி சாலையின் நடுவே பார்க்கிங் விளக்குகளை எரிய விட்டவாறு நிறுத்தி இருந்தார். இதை கவனிக்காத ஷாம் ரவி, வேகமாக சென்று காரின் பின்பகுதியில் மோதினார். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

ஒரே பகுதியை சேர்ந்த நண்பர்கள் இருவரும் சாலை விபத்தில் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஒரு கோடி ரொக்கம் அறிவிப்பு

மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

இந்தியா – நேபாளம் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்: நேபாள பிரதமர்!