காற்றழுத்த மண்டலம் எங்கே கரையைக் கடக்கும்? வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாக குறைந்த லேசான மழையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வருகின்றது.

இந்த நிலையில், புயல் சின்னம் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திரம் அருகே கரையை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் தகவல்

இந்திய வானிலை மையம் புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில்,

“தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் கடந்த 6 மணிநேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகின்றது.

சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது.

மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் கடற்கரையை நோக்கி வரும். அக்டோபர் 17 அன்று புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே சென்னை அருகில் கரையைக் கடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது