காற்று மாசுபாடு எதிரொலி: உலக அளவில் 81 லட்சம், இந்தியாவில் 21 லட்சம் பேர் பலி; அதிர்ச்சி தகவல் வெளியீடு

புதுடெல்லி,

உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் சுகாதார விளைவுகளுக்கான மையம் (எச்.இ.ஐ.) என்ற அமைப்பு, யுனிசெப் அமைப்புடன் இணைந்து காற்று மாசுபாடு பற்றி ஆய்வு மேற்கொண்டது. இதுபற்றி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

அதில், 2021-ம் ஆண்டில் காற்று மாசுபாட்டால், இதற்கு முந்தின எந்த ஆண்டையும் விட அதிக அளவான மரணங்கள் ஏற்பட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

உலக அளவில் 2021-ம் ஆண்டில் 81 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழந்து உள்ளனர். இவற்றில் தெற்காசியா அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தெற்காசியாவில் ஏற்பட்ட மரணங்களுக்கு, காற்று மாசுபாடு பாதிப்பே, ஆபத்து நிறைந்த காரணிகளில் முன்னிலையில் உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்தே, உயர் ரத்த அழுத்தம், உணவு முறை மற்றும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன.

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிப்பதும் காற்று மாசுபாடு அடைவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, மிக பழைய வாகனங்கள் உள்ளிட்டவையும் காற்று மாசுபாட்டுக்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

இந்த காற்று மாசுபாட்டால், மக்களின் ஆயுட்காலம் குறைகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கு முன் வெளியான அறிக்கை ஒன்றில், இந்தியாவின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத காற்று மாசுபாட்டுக்கு ஆளாகின்றனர்.

இதே மாசு அளவு தொடரும் சூழலில், வட இந்தியாவில் வசிக்கும் 24.8 கோடி மக்கள், 8 ஆண்டுகளுக்கும் கூடுதலான வாழ்நாளை இழக்க நேரிடும்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க மாசு குறைக்கப்பட்டால், டெல்லியில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் 9.4 ஆண்டுகள் அதிகம் வாழலாம். பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகமாக 7 ஆண்டுகளும், அரியானா மாநில மக்கள் 8 ஆண்டுகளும் அதிகமாக வாழலாம் என தெரிவிக்கின்றது.

எச்.இ.ஐ. அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் 21 லட்சம் பேரும் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேரும் உயிரிழந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்த இரு நாடுகளும் தலா 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகையை கொண்டுள்ளன.

அந்த அடிப்படையில், மொத்த உலகளாவிய நோய் பாதிப்புகளில் 54 சதவீதம் அளவுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கொண்டுள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்