காலாண்டு முடிவுகளால் மீண்டும் உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

காலாண்டு முடிவுகளால் மீண்டும் உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!டிசிஎஸ் வருவாய் அறிவிப்பால், புதிய உச்சத்தில் பங்குச் சந்தை.கோப்புப் படம்

மும்பை: டிசிஎஸ் ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததையடுத்து, ஐடி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடு செய்ததால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று புதிய உச்சத்தை எட்டியது.

மதிய நேரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 996.17 புள்ளிகள் உயர்ந்து 80,893.51 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 276.25 புள்ளிகள் உயர்ந்து 24,592.20 புள்ளிகளில் வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 622.00 புள்ளிகள் உயர்ந்து 80,519.34 ஆகவும், நிஃப்டி 186.20 புள்ளிகள் உயர்ந்து 24,502.15 ஆகவும் இருந்தது. இன்று 1,667 பங்குகள் ஏற்றத்திலும், 1,638 பங்குகள் சரிந்தும், 97 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜூன் காலாண்டில் 8.7 சதவிகிதம் வளர்ச்சி பெற்று ரூ.12,040 கோடியாக உயர்ந்தது என அறிவித்தது.

ஜூன் தொடக்கத்திலிருந்து மிட்கேப் குறியீடு 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், ஸ்மால்கேப் குறியீடானது அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் ஏற்றத்திலும் மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி பங்குகள் சரிந்தும் வர்த்தகமானது.

டிசிஎஸ் பங்குகள் 6 சதவிகிதம் உயர்ந்து நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டியது. இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பேங்க் நிஃப்டியும் 0.5 சதவிகிதம் உயர்ந்தது. ரியாலிட்டி, ஹெல்த்கேர் மற்றும் பார்மா துறைகளுக்கான குறியீடுகள் சுமார் 1 சதவிகிதம் வரை சரிந்தது.

ஆசிய சந்தைகளில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. சியோல் மற்றும் டோக்கியோ சரிந்து வர்த்தகமானது. அதே வேளையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமையன்று) பெரும்பாலும் சரிவில் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.59 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 85.90 டாலராக உயர்ந்துள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமையன்று) ரூ.1,137.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

நிஃப்டி-யில் உயர்ந்த பங்குகள்:

டிசிஎஸ், எல்டிஐ மைண்ட்ட்ரீ, விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகியவை.

நிஃப்டி-யில் சரிந்த பங்குகள்:

திவிஸ் லேப்ஸ், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை.

சென்செக்ஸ் உயர்வுக்கு காரணமான பங்குகள்:

டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்

சென்செக்ஸ் சரிவுக்கு காரணமான பங்குகள்:

என்டிபிசி, எம் & எம், சன் பார்மா, மாருதி சுசூகி, நெஸ்லே இந்தியா

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!