காளான் வளர்ப்பை வேளாண் செயல்பாட்டில் சேர்த்து அறிவிக்கை வெளியிட்டது தமிழக அரசு

காளான் வளர்ப்பை வேளாண் செயல்பாட்டில் சேர்த்து அறிவிக்கை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் செயல்பாடுகளின் கீழ் சேர்த்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் பயிர்த்தொழிலை மட்டுமே சார்ந்திருக்காமல் ஆண்டு முழுவதும் நிலையான வருவாய் பெறும் வகையில் வேளாண் சார்ந்த பிற தொழில்களான கால்நடை வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், மீன் வளம், தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்த்தல், வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடும் வகையில் அவர்களை தமிழக வேளாண்துறை ஊக்குவித்து, சிறப்பான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வேளாண் உற்பத்தி சார்ந்திருந்தாலும், இன்னும் வகைப்படுத்தப்படாமல் இருந்த காளான் வளர்ப்பை வேளாண் உற்பத்தி தொழிலில் தமிழக அரசு சேர்த்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புரதச்சத்து நிறைந்த உணவாக தற்போது காளான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அசைவ உணவுக்கு இணையான சைவ உணவான காளான் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த காளான் உற்பத்தி தொழிலை விரிவாக்கும் நோக்கில் தற்போது இந்த நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் வேளாண்துறை செயலர் அபூர்வா வெளியிட்ட அறிவிக்கையில், “வெள்ளை மொட்டுக் காளான் (பட்டன் மஷ்ரூம்), பால் காளான் (மில்கி மஷ்ரூம்), சிப்பிக்காளான் ( ஆய்ஸ்டர் மஷ்ரூம்) மற்றும் இதர உணவாக எடுத்துக் கொள்ளத்தக்க வகையிலான காளான்கள் பயிரிடுதல் மற்றும் வளர்த்தல் ஆகியவை தமிழகத்தில் வேளாண் செயல்பாடுகளின் கீழ் வகைப்படுத்தி அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காளான் வளர்ப்பு தற்போது வகைப்படுத்தப்படாமல் உள்ளது. காளான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இதனை வேளாண் உற்பத்தியின் கீழ் கொண்டுவர விக்கிரவாண்டி எம்எல்ஏ-வான அன்னியூர் சிவா வேளாண்துறையிடம் கோரிக்கை விடுத்து வந்தார். அத்துடன், பல்வேறு காளான் உற்பத்தியாளர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

எனவே, தற்போதைய காளான் தேவையை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தோட்டக்கலைத்துறை மூலம் காளான் குடில் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மூலம் விவசாயிகள் மத்தியில் காளான் வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும்,” என்றனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்