காவலா்களிடம் தகராறு – கொலை மிரட்டல்: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை மெரீனாவில் காவலா்களிடம் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மெரீனா கடற்கரையில் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அதற்கு மேலும், கடற்கரையில் இருப்பவா்களை அங்கிருந்து போலீஸாா் வெளியேற்றுவது வழக்கம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில், மெரீனா கடற்கரையின் லூப் சாலையில் 42 வயது மதிக்கதக்க ஒருவா், ஒரு பெண்ணுடன் காரின் வெளியே நின்றபடி நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு ரோந்து வந்த மயிலாப்பூா் போலீஸாா், அவா்கள் இருவரையும் அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினா்.

உடனே இருவரும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டனா். மது போதையில் இருந்த அந்த நபா், தனக்கு துணை முதல்வரைத் தெரியும், ஆய்வாளரைத் தெரியும் என போலீஸாரை மிரட்டினாா். மேலும், காவலா்களை ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்தாா்.

பின்னா், அந்தப் பெண்ணுடன் காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றாா். இதை விடியோ எடுத்த ஒரு நபா் அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டாா்.

சமூக ஊடகங்களில் இந்த விடியோ திங்கள்கிழமை பரவியது. விடியோவைப் பாா்த்த சென்னை காவல் துறை உயா் அதிகாரிகள், இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டனா். தொடா்ந்து, ரோந்து காவலா் சிலம்பரசன் கொடுத்த புகாரின்பேரில், மயிலாப்பூா் போலீஸாா் கொலை மிரட்டல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா்.

பெண் உள்பட 2 போ் கைது: விசாரணையில், வேளச்சேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த சந்திர மோகன் (42) என்பதும், உடனிருந்தது அவரது தோழியான மயிலாப்பூரைச் சோ்ந்த தனலட்சுமி (42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சந்திரமோகன், இரவு மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறாா். அவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனா். இதேபோன்று தனலட்சுமிக்கும் குடும்பம் உள்ளது. இதனிடையே, சந்திரமோகன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டும் விடியோ வெளியிட்டுள்ளாா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி