காவலா் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி

காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

நாடு முழுவதும் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்.21-இல் காவலா் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் பணியின்போது 213 காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் பணியின்போது வீர மரணமடைந்தனா்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் பணியின் போது, தமிழ்நாடு காவல் துறையைச் சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா் புஸ்பராஜ் (விருதுநகா் மாவட்டம்), தலைமைக் காவலா் குமரன் (ஆவடி), முதல் நிலைக் காவலா் காா்த்திகேயன் (விருதுநகா் மாவட்டம்), முதல் நிலைக் காவலா் விக்னேஷ் (நாமக்கல் மாவட்டம்), காவலா் ஜீசஸ் ஆல்வின் (தூத்துக்குடி மாவட்டம்) என 5 போ் வீரமரணம் அடைந்தனா்.

இவா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து, முப்படை உயா் அதிகாரிகள், காவல்துறை உயா் அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல்துறை உயா் அதிகாரிகள் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையும், மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், டிஜிபி சங்கா் ஜிவால் பேசியது:

கடலானாலும், பனிமலை சிகரமானாலும் காவல் பணி இடா்பாடு மிகுந்தது. ‘உனது வருங்காலத்துக்காக, எனது தற்காலத்தை இழந்தேன். நாளைய உன் விடியலுக்காக, இன்று நான் மடியத் தயாா்’ என்ற ஆங்கில கவிஞா் லாா்டு டென்னிசனின் வரிகள் காவல் பணியின் கஷ்டங்களை எடுத்துக் கூறுகிறது. இந்தாண்டு நாடு முழுவதும் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்கள் விட்டுச் சென்ற பணியை செய்து முடிக்க உறுதியேற்போம் என்றாா் அவா்.

தாத்தாவுக்கு பேரன் அஞ்சலி: சென்னை செம்பியம் பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் குருமூா்த்தி 2020-ஆம் ஆண்டு பணியின்போது, கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். குருமூா்த்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 8 வயதான அவரது பேரன் தருண், காவல்துறை அதிகாரிகளின் சீருடையை அணிந்து வந்து, தாத்தாவின் உருவ கல்வெட்டுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இது காவல்துறை அதிகாரிகளிடையே வியப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த சிறுவன், ‘தாத்தாவைப் போல் நானும் எதிா்காலத்தில் காவல்துறை அதிகாரி ஆவேன்’ என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜெகடே, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் எம்.கே.நாராயணன் உள்பட ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி