காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கிய சம்பவம்: 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

குப்வாரா,

ஜம்மு காஷ்மீரின், குப்வாரா மாவட்ட காவல் நிலைய போலீசார், கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் ஒரு வழக்கு விசாரணைக்காக, ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் காவல் நிலையத்திற்கு ராணுவ வீரர்கள் குழுவாக சென்று, அங்கிருந்த போலீசாரை தாக்கினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் காவல் நிலையத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியது, பிராந்திய ராணுவ பிரிவின் 160-வது பட்டாலியனை சேர்ந்த ராணுவ வீரர்கள் என்று தெரியவந்தது. மூத்த ராணுவ அதிகாரிகளுடன், ராணுவ வீரர்கள் கொண்ட குழு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்கும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.

பிராந்திய ராணுவம் என்பது, பகுதி நேர தன்னார்வலர்களை கொண்ட ராணுவ பிரிவாகும். அவர்கள் ராணுவத்திற்கு உதவி அமைப்பாக செயல்படுவார்கள். குப்வாரா போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாக, ராணுவ லெப்டினட் கர்னல் அதிகாரிகள் அங்கித் சூட், ராஜிவ் சவுகான், நிகில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுடன் 13 ராணுவ வீரர்களும் இருந்துள்ளனர்.

அவர்கள் விதிகளை மீறி காவல் நிலையத்தில் நுழைந்ததாகவும், அங்கிருந்த போலீசாரை துப்பாக்கி மற்றும் லத்திகளால் தாக்கியதாகவும் புகாரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆயுதங்களை காட்டி போலீசாரின் செல்போன்களையும் பறித்து வந்துள்ளனர். போலீஸ் ஏட்டுவை கடத்தியும் சென்றுள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் தலையீட்டால், துரித விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

காவல் நிலையத்தில் நுழைந்து, போலீசாரை தாக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், கொள்ளையடித்தல், தீவிர காயம் ஏற்படும் வகையில் தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் குப்வாரா துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று போலீஸ்தரப்பில் கூறப்பட்டு உள்ளது. ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது, "போலீஸ் – ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பிரச்சினையாகி உள்ளது. ராணுவத்தினர் போலீசாரை தாக்கியது தவறானது. இரு தரப்புக்கும் இடையிலான சிறிய செயல்பாட்டு முரண்கள் இணக்கமாக தீர்க்கப்பட்டு வருகிறது" என்றார்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்