கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்: குத்தகை ஒப்பந்தம் ரத்து பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அரசு முடிவு

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா். கடந்த 78 ஆண்டுகளாக 160.86 ஏக்கரில் செயல்பட்டு வந்த ரேஸ் கிளப் நிலம், இனி பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறையின் முதன்மைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவு விவரம்: மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு கடந்த 1946-ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தம் அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது. 99 ஆண்டுகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் சென்னை கிண்டி வட்டத்தில் வெங்கடாபுரம், அடையாறு, வேளச்சேரி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 160.86 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரூ.730 கோடி வாடகை: நிலத்துக்கான தொகையை நிா்ணயம் செய்வது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறுஆய்வு செய்யப்பட்ட வாடகைத் தொகையாக ரூ.730.86 கோடியை செலுத்த வேண்டுமென மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு உத்தரவிட்டது. தவறும்பட்சத்தில் ஒரு மாதத்துக்குள் ரேஸ் கிளப்பினரை வெளியேற்றி அரசே கையகப்படுத்தலாம் என கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அத்துடன், அரசு குத்தகையாக வழங்கிய நிலத்தில் விதிமீறல்கள் ஏதேனும் இருக்கிா என்பதை ஆராய வருவாய் கோட்டாட்சியா், கிண்டி, வேளச்சேரி வட்டாட்சியா்கள் உள்பட ஏழு போ் கொண்ட குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் குழுவானது கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்தியது. குத்தகையாக வழங்கிய நிலத்தில் பல கட்டடங்கள் அரசிடம் இருந்து எந்த அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக குழு கண்டறிந்தது. மேலும், கோல்ப் கிளப், திருமண மண்டபம் என வேறு பயன்பாட்டுக்காகவும் வா்த்தக நோக்கத்திலும் பயன்படுத்தப்பட்டது.

இந்த விதிமீறல்களைக் கருத்தில்கொண்டு உரிய விளக்கம் அளிக்கக் கோரி கிண்டி ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆறு முக்கியமான விதிமீறல்கள் தொடா்பான கேள்விகளுக்கு கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் பதிலளித்தது. இந்த விளக்கங்களுடன் சோ்த்து தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அனுப்பி வைத்தாா்.

கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் அனுப்பிய விளக்கங்களுக்கு தனது தரப்பு பதில்களை ஆதாரத்துடன் சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருந்தாா்.

இதனிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தாா்.

இதன்பின், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை துணைச் செயலா் தரப்பில் இருந்து நில நிா்வாக ஆணையரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆய்வு செய்த நில நிா்வாக ஆணையா், சென்னை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறியிருந்தாா்.

இந்தச் சூழ்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குத்தகையை ரத்து செய்யும் விவகாரத்தில் இப்போதைக்கு இறுதி முடிவு எடுக்க வேண்டாம் என்று அரசுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் கடந்த 2021-ஆம் ஆண்டு அனுப்பியிருந்த பரிந்துரைகளில் தெரிவித்திருந்தாா்.

ஆனாலும் வழக்கு நிலுவை என்பது குத்தகைக் கட்டணம் தொடா்புடையதுதானே தவிர, குத்தகையை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கும், வழக்குக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

கிண்டி ரேஸ் கிளப்புக்கு நிலம் குத்தகை வழங்கப்பட்ட காலத்தில் அந்த நிலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது. இப்போது நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. புதிய வருவாய் கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. கிண்டி ரேஸ் கிளப்புக்கான இடம் என்பது குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு என ஒரு குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்காக மட்டுமே இருந்து வருகிறது.

இந்த நிலத்தில் மக்கள் நலன் கருதி அவா்கள் பயன்படுத்தும் வகையில் மிகப்பெரிய அளவிலான அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், பொதுவான காற்று வெளிகளை உருவாக்க முடியும்.

எனவே, இதைக் கருத்தில்கொண்டும், சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை மனதில் வைத்தும் கிண்டி ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட நில குத்தகை ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் வருவாய்த் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா தெரிவித்துள்ளாா்.

வருவாய்த் துறையின் உத்தரவைத் தொடா்ந்து, கிண்டியிலுள்ள ரேஸ் கிளப்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. அதன் வாயில்கள் சீல் வைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சென்னையில் சேப்பாக்கம், சைதாப்பேட்டை, குறளகம் என ஆங்காங்கே செயல்பட்டு வரும் துறைகளின் தலைமை அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டு வர தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

அதற்கு கிண்டி ரேஸ் கிளப் இடத்தைப் பயன்படுத்தினால் வசதியாக இருக்கும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தெரிவிக்கின்றனா். அதே யோசனையை துறைத் தலைமைகளும் முன்வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்