தலை சிதறிய முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (45). இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. கணேசன் மனைவி, குழந்தைகளுடன் கடந்த 2 ஆண்டுகளாக மாறாந்தையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவி முத்துலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். முத்துலட்சுமி, நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன், பேட்டையைச் சேர்ந்த கொம்பையாவிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் கணேசன் கடனை திருப்பி செலுத்தவில்லை. எனவே, முத்துலட்சுமி, கணவரின் சகோதரி சாந்தியிடம் பணம் வாங்கி கடனை திருப்பி செலுத்தினார். பின்னர் முத்துலட்சுமியால் சாந்திக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.
நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கணேசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவர் தனது தங்கை சாந்தியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறி மனைவி முத்துலட்சுமியிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முத்துலட்சுமி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் தூங்க சென்றார்.
நள்ளிரவு 1 மணியளவில் கணேசன் தனது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கி கொண்டு மாடிக்கு சென்றார். அங்கு குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மனைவி முத்துலட்சுமியின் தலையில் சிலிண்டரை தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. இதில் தலை சிதறிய முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே கண்விழித்த குழந்தைகள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். வெறிச்செயலில் ஈடுபட்ட கணேசன் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணேசனை வலைவீசி தேடினர். இதையடுத்து நெல்லையை அடுத்த பேட்டையில் பதுங்கியிருந்த கணேசனை போலீசார் நேற்று பிடித்து கைது செய்தனர்.
குடும்பத்தகராறில் மனைவி தலையில் கணவரே கியாஸ் சிலிண்டரை போட்டு படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.