கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : 8 மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடிப்பு

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : 8 மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடிப்பு மீண்டும் வரலாம் என்பதால் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்புஆம்பூரில் திரியும் ஒற்றை காட்டு யானை

ஆம்பூர் அருகே கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை (ஜூலை 13) இரவு புகுந்தது. சுமார் 8 மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது.

ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற வனப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக வயதான ஒற்றைக் காட்டு யானை திரிந்து வருகிறது. அந்த யானைக்கு சிறிது கண் பார்வை குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடிக்கடி கிராமப் பகுதிக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தோட்டாளம் கிராமப் பகுதி அருகே முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் விவசாய நிலத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை வந்துள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் ஆம்பூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த யானையை காட்டிற்குள் விரட்ட பொதுமக்கள் கடும் முயற்சி மேற்கொண்ட போது, யானை வெங்கிளி கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்றது. அதனால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளானார்கள். ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வெங்கிளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்தினர்.

உதவி வனப்பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், வனச்சரக அலுவலர்கள் பாபு (ஆம்பூர்), சேகர் (ஆலாங்காயம்), இந்துமதி (ஒடுக்கத்தூர்) மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த யானையைக் காட்டிற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 6 மணிக்கு ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமப் பகுதியில் வனப்பகுதியின் எல்லையோரம் யானை விரட்டியடிக்கப்பட்டது. காலை 8 மணி வரையிலும் வனப்பகுதி எல்லையோரமே திரிந்து கொண்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் அந்த யானை காட்டுக்குள் செல்லவில்லை.

அந்த பகுதி செங்குத்தான மலையாக இருப்பதால் அதன்மீது ஏறி காட்டிற்குள் அந்த யானையால் செல்ல முடியாது. அது வயதான, கண்பார்வை குறைவான யானையாக இருப்பதால் மலை மீது ஏறிச் செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.

மீண்டும் அந்த யானை கிராமப் பகுதிக்குள் வரலாம் என்பதால் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி