கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது.

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று (ஆக.28) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சூரியபிரகாசம், “இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் மர்மமான முறையில் இறந்திருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார். மேலும், “விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசு, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எந்த இழப்பீட்டையும் அறிவிக்கவில்லை” எனவும் குற்றம் சாட்டினார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரை தவிர மற்ற அனைத்து விவரங்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மாணவி புகார் அளித்ததும், வழக்குப்பதிவு செய்து, பள்ளி உரிமையாளர், முதல்வர், ஆசிரியர்கள் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். பெண் ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியான சிவராமன், கடந்த மாதமும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக இன்னும் கிடைக்கவில்லை” என விளக்கினார். மேலும், சிவராமனின் தந்தை மதுபோதையில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாகவும், அதற்கு கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து என்சிசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சமூக நலத்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள், மனநல மருத்துவர்கள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு, மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து பள்ளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இந்த பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியின்றி எப்படி முகாம் நடத்தப்பட்டது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்