கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன். இந்த போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாணவிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரம் பற்றி தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து முடிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்கள் பெற்றோரை கலந்து ஆலோசித்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரனும், புலனாய்வுக் குழுவின் தலைவர் காவல்துறை அதிகாரி பவானீஸ்வரியும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காவல்துறை அதிகாரி பவானீஸ்வரி, "பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும், இது போல மற்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதையும் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவித என்.சி.சி முகாமும் நடத்த அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இதை மீறி நான்கைந்து பள்ளிகளில் இது போலப் போலியாக முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணைக்குப் பின்பு தான் முழுமையாகச் சொல்ல முடியும்" என்று அவர் கூறினார்.

கைதான சிவராமன் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "கைது செய்வதற்கு முன்பு சிவராமன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் தான் மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்" என்று பவானீஸ்வரி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் கூறுகையில், "பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், சம்பவம் நடந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். மேலும் ஆலோசனைகள் வழங்குவோம்" என்று கூறினார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!