கிருஷ்ண ஜெயந்தி, தொடர் விடுமுறை: 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – வேளாங்கண்ணிக்கு 1,050 பேருந்துகள்
சென்னை: ஆகஸ்ட் 24, 25-ம் தேதி வார இறுதிநாட்கள் (சனி, ஞாயிறு), 26-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள்.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 23, 24-ம் தேதிகளில் 485 பேருந்துகளும், 25, 26-ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
23, 24-ம் தேதிகளில் ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பெங்களூரு, திருப்பூர்,ஈரோடு, கோவை உள்ளிட்ட முக்கியநகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 985 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளில் பயணிக்க,www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க, பேருந்து நிலையங்களில் போதியஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணம் செய்ய 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்தும், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை 1,050 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.