கிறிஸ்தவ சொத்துகள், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வ வாரியம் தேவை – ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து

கிறிஸ்தவ சொத்துகள், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வ வாரியம் தேவை என ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பைஜூ நிஜத் பால் என்பவர் நாகர்கோவிலில் ஒரு கல்லூரி தாளாளராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த கல்லூரி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும், இதுகுறித்து கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், "கல்லூரியின் தாளாளராக ஒருவரை நியமிக்க முடிவு செய்த நிலையில், பேராசிரியர்கள் சிலர் அவர் மீது புகார் அளித்ததால், அந்த நியமனத்துக்கு சி.எஸ்.ஐ. பிஷப் தடை விதித்து உள்ளார். ஆனால் அந்த பதவிக்கு நியமிக்க வேண்டிய நபர், தன் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை. பிஷப் தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளார் என்கிறார். கல்லூரி தாளாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் சி.எஸ்.ஐ. விதிகளை பின்பற்றியதாக தெரியவில்லை. அங்கு ஒரு சில நபர்கள், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படுவது தெரியவருகிறது.

இதுதொடர்பான சொத்துகளை முறைகேடாக நிர்வகிப்பதும், நிதி தவறாக பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டிய நேரம் இது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. கல்வி, மருத்துவமனை போன்ற பல பொது சேவைகளை கிறிஸ்தவ நிறுவனங்கள் செய்து வருகின்றன என்பதை மறந்துவிட முடியாது. இந்நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் நிதியை பாதுகாப்பது அவசியம்.

இந்துக்கள், முஸ்லிம்களின் அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை. கிறிஸ்தவ நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்க, நிர்வாகத்தின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டப்பூர்வ வாரியம் தேவை.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஆகியோரை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

Editorial: Who Will Save The Middle Class?

Guiding Light: Fast Before You Feast!

Editorial: Marine Drive’s Style Needs To Be Preserved