கிலோ பச்சரிசி ரூ.70, புழுங்கல் ரூ.76: தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி

கிலோ பச்சரிசி ரூ.70, புழுங்கல் ரூ.76: தமிழகத்தில் அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் ரூ.76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கிறது. மோட்டா ரகம், சன்ன ரகம் என 2 ரகம் இருந்தாலும், சன்ன ரக அரிசியையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அரிசியின் தரத்தையும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் பொருத்து விலை மாறுபடுகிறது. சில குறிப்பிட்ட பிராண்ட்கள் விலை ரூ.70-க்கு மேல்தான் உள்ளது. இந்த விலை மாதம்தோறும் அதிகரிப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அரிசி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, நெல் சாகுபடி பரப்பளவு குறைவது, அதிகரிக்கும் உற்பத்தி செலவு, வேலையாட்களின் சம்பள உயர்வு, மின் கட்டண உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவையே விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் – அரிசி வணிகர்கள் சங்க சம்மேளன தலைவர் டி.துளசிங்கம், பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.சி.மோகன் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 7.50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை. ஆனால், தமிழகத்தில் 70 முதல் 72 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து 25 முதல் 30 லட்சம் டன் நெல்லாகவும் அரிசியாகவும் வருகிறது. அதனால், சந்தையில் எப்போதும் 5 லட்சம் டன் அரிசி உபரியாகவே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அரிசி தட்டுப்பாடு இல்லை. நெல் அறுவடை காலத்தில் விலை குறையும். அறுவடை இல்லாத காலங்களில் விலை உயரும்.

இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகளுக்கு உயர் சன்ன ரக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.இதனால், கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை அரிசி விலை அதிகமாக இருந்தது. பொதுமக்கள், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, அரிசிக்கு மத்திய அரசு 20 சதவீத சுங்கவரி விதித்ததால் ஏற்றுமதி குறைந்து அரிசி விலை சீரானது.ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் மூலமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

தவிர, அரிசி ஆலைகளில் வேலை செய்ய, வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. மின் கட்டண உயர்வால் 1,800 அரிசி ஆலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதேநேரம், அரிசியின் மொத்த விலையில் பெரிய மாற்றம் இல்லை. டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஏற்று கூலி, இறக்கு கூலி போன்ற செலவினங்களால் அரிசியின் சில்லறை விலையில்தான் மாற்றம் வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறிய ‘ஆம்லெட்’டில் கரப்பான்பூச்சி

மத்திய பிரதேசம்: பேருந்து மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி

உத்தர பிரதேசம்: ஏ.ஐ. மூலம் ஆசிரியை புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர்கள் கைது